தலச்சிறப்பு |
இக்கோயில் 'நகுலன் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. நாரதருக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தில், பிரம்மதேவன் கோபம் கொண்டு "நீ எந்த இடத்திலும் நிலையாக இருக்க முடியாது" என்று சாபமிட்டார். இதனால் நாரதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் இந்த ஸ்தலத்திற்கு வந்து நாராயணனை நோக்கி தவம் புரிய, மகாவிஷ்ணு காட்சி தந்தார். 'தமக்கு தத்வ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும்' என்று நாரதர் வேண்ட, பகவானும் அவ்வரத்தை அளித்த ஸ்தலம். மகாவிஷ்ணுவே பரதத்துவம் என்று நிறுத்தி, அவரை பூஜிக்கும் முறை, துதி முதலியனவற்றை இருபத்தைந்தாயிரம் கிரந்தங்களில் நாரதர் நாரதீய புராணத்தை எழுதியதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
மூலவர் பாம்பணையப்பன், கமலநாதன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான நகுலன் ஜீர்ணோத்தரணம் செய்து வழிபட்டதால் 'நகுலன் பிரதிஷ்டை' என்றழைக்கப்படுகிறது. தாயாருக்கு கமலவல்லி நாச்சியார் என்பது திருநாமம். மார்க்கண்டேயர் மற்றும் நாரதருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
|